லோக்பால் அமைக்காவிட்டால் ஜனவரி 30-ந் தேதி முதல் உண்ணாவிரதம் மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை

லோக்பால் அமைக்காவிட்டால் ஜனவரி 30-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காந்தியவாதி அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-12-01 21:23 GMT
மும்பை,

சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். இவரது தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசு பணியாளர்களை விசாரிக்க மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் அமைக்க வேண்டும். ஆனால் மத்தியில் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை.

லோக்பால் அமைக்காவிட்டால் தனது சொந்த கிராமமான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு லோக்பால் அமைப்பதை தவிர்க்க தொடர்ந்து சாக்குபோக்குகளை கூறி வருகிறது. லோக்பால் தேர்வு குழுவில் இடம்பெற நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இல்லை என முதலில் கூறியது. பின்னர் சிறந்த தேர்வு குழு இல்லை என காரணம் கூறியது.

இதை கண்டித்து நான் கடந்த மார்ச் 23-ந் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தினேன். அப்போது பிரதமர் அலுவலகம் எனது கோரிக்கை நிறைவேற்றப்படும் என எழுத்து மூலமாக உறுதி அளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டேன்.

பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி எனது சொந்த கிராமத்தில் போராட்டத்தை தொடங்கினேன். ஆனால் இந்த முறையும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக மராட்டிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் லோக்பால் அமைப்பதற்கான வேலைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இருப்பினும் மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பாக வருகிற ஜனவரி 30-ந் தேதி வரை அவகாசம் வழங்குகிறேன். அதற்குள் அமைக்காவிட்டால் ஜனவரி 30-ந் தேதி முதல் தனது கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்