மதுபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் மதுக்கடையை உடைத்து 437 மதுபானபாட்டில்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-01 22:41 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே பழங்குளத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் கடந்த 26-ந் தேதி நள்ளிரவில் கடையின் மேற்பார்வையாளர் முத்துமாரி, விற்பனையாளர் சதீஸ்குமார் ஆகியோர் விற்பனை முடிந்து கடையை பூட்டி சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.96 ஆயிரத்து 270 மதிப்பிலான 437 மதுபாட்டில்களை திருடிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடையின் மேற்பார்வையாளர் முத்துமாரி அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது சிலர் குடித்துவிட்டு போட்டிருந்த மதுபாட்டில்களை சோதனையிட்டபோது அவை திருடுபோன மதுபானங்களின் பதிவு எண்களை கொண்டதாக இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ராமநாதபுரம் சத்திரதெருவை சேர்ந்த முருகன் மகன் மோகன்(வயது 22) என்பவர் இந்த உயர்ந்தவிலை மதுபானங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கலைஅரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன், தனிபிரிவு காவலர் முரளி, ஏட்டு கருப்பசாமி ஆகியோர் மோகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 282 மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதம் உள்ள மதுபானங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததுடன், குடித்து காலி செய்ததாக தெரிவித்தார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறை சென்றபோது ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த பெரியண்ணன் மகன் மகேசுவரன்(32) என்பவர் பழக்கமாகி உள்ளார். பல திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய மகேசுவரன் வெளியே வந்ததும் மோகனை ஜாமீனில் எடுத்துள்ளார். அந்த நன்றிக்கடனுக்காக அவரை அழைத்து வந்து மதுக்கடையில் திருடியுள்ளார்.

மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்து பங்குபோட்டுக்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மகேசுவரனை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்