4 கடைகள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பம்: 8–ம் வகுப்பு மாணவன் கைது

நாகர்கோவிலில் 4 கடைகள் தீயில் எரிந்து நாசமான விவகாரத்தில் 8–ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கடைக்காரர் திட்டியதால் தீ வைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2018-12-02 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் கூழக்கடை பஜாரில் கடந்த 30–ந் தேதி நள்ளிரவு 4 கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். முதற்கட்டமாக தீ விபத்து நடந்த கடைகளின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தீப்பிடிப்பதற்கு முன் ஒரு சிறுவன் அந்த பகுதியில் அங்குமிங்குமாக ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த சிறுவன் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

கடைக்காரர் திட்டியதால் ஆத்திரம்

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடைகள் தீப்பிடித்து எரிந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது கடைகளில் தீப்பிடிப்பதற்கு சில தினங்களுக்கு முன் அந்த மாணவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தீப்பற்றிய 4 கடைகளில் ஒரு கடைக்காரர் மாணவனை திட்டியுள்ளார். இனி இங்கு வந்து விளையாடக் கூடாது என்றும் கண்டித்து இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், தன்னை திட்டிய கடைக்காரரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் கடைக்கு தீ வைத்துள்ளான். ஆனால் எதிர்பாராதவிதமாக தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. மாணவன் கூறிய இந்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பெற்றுக் கொண்டனர். பின்னர் அவனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்