புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் சாலைமறியல் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காததால் திருச்சிற்றம்பலத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-02 23:00 GMT
திருச்சிற்றம்பலம்,

கஜா புயலால் திருச்சிற்றம்பலம் பகுதியில் ஏராளமான வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் சேதமடைந்தன. இதனால் அந்தபகுதி மக்கள் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க.வினர் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் முழுமையாக நிவாரண பொருட்களை வழங்காமல் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் திருச்சிற்றம்பலத்தில் நேற்று அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்காத பொதுமக்கள் சாலைமறியலை கைவிடாமல் அ.தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்