அந்தியூர் அருகே 2 பேர் கொலை: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்

அந்தியூர் அருகே அடித்துக்கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-02 23:45 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கொன்னமரத்து அய்யன் கோவில் வளாகத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த வடிவேல் மற்றும் கந்தசாமி, பெரியசாமி ஆகியோரை அதேப்பகுதியை சேர்ந்த நல்லசாமி என்பவர் கட்டையால் தாக்கினார். இதில் வடிவேல், கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பெரியசாமி சிறு காயத்துடன் உயிர்தப்பினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று இறந்த கிடந்த வடிவேல் மற்றும் கந்தசாமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கந்தசாமி மற்றும் வடிவேலின் உறவினர்கள் நேற்று காலை பகல் 11 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், 2 பேரில் உடல்களையும் பிரேத செய்யக்கூடாது என்று கூறியதோடு, கொலை குற்றவாளியை அடித்துக்கொல்ல வேண்டும் என்று கூறினார்கள். மேலும், அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரி முன்பாக அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தியூர்–பர்கூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ் மற்றும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அங்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கொலை செய்யப்பட்டவர்களில் உறவினர்கள் கூறுகையில், கொடூரமான முறையில் வடிவேல் மற்றும் கந்தசாமி கொலை செய்யப்பட்டு உள்ளனர். அதனால் கொலை குற்றவாளியாக நல்லசாமிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இல்லையெனில் எங்கள் சாலைமறியல் போராட்டம் தொடர்வதோடு, கந்தசாமி மற்றும் வடிவேலின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்யவிடமாட்டோம் என்றனர்.

அதற்கு போலீசார், கொலை குற்றவாளி நல்லசாமிக்கு கோர்ட்டு மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும். மேலும் இறந்தவர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு மதியம் 12 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து வடிவேல் மற்றும் கந்தசாமியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்