சேலத்தில்: பெற்றோர் இன்றி தவித்த அண்ணன்-தங்கைகளுக்கு அரசு குடியிருப்பில் வீடு வழங்கிய கலெக்டர்

சேலத்தில் பெற்றோர் இன்றி தவித்த அண்ணன்-தங்கைகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடி யிருப்பில் கலெக்டர் ரோகிணி வீடு வழங்கினார்.

Update: 2018-12-02 22:00 GMT
சேலம், 

சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவை சேர்ந்தவர் ஷாலினி (வயது 17). இவர், சிறு வயதிலேயே தந்தையால் கை விடப்பட்டு தாயையும் இழந்து தவித்து வந்தார். இவரும், இவருடைய அண்ணன் வசந்தகுமார் மற்றும் தங்கை உமா ஆகியோர் கடந்த 30-ந் தேதி மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது, கலெக்டரிடம் ஷாலினி கூறும்போது, ‘ஏற்கனவே உடல்நலக் குறைவால் எங்களது தாயார் சிவகாமி இறந்துவிட்ட நிலையில், தந்தை எங்களை கைவிட்டு சென்று விட்டார். இதனால் நாங்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வசித்து வருகிறோம். நாங்கள் பாதுகாப்பாக வசிப்பதற்கு வீடு வழங்கி உதவ வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவரது மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர் ரோகிணி, எருமாபாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஷாலினிக்கு சொந்தமாக வீடு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இந்த தகவல் உடனடியாக அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், எருமாபாளையத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஷாலினிக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு ஷாலினிக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை வழங்கினார்.

அப்போது, ஏற்கனவே தாய், தந்தையை இழந்து தங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுமோ? என்ற நிலையில் இருந்து வந்த ஷாலினி மற்றும் அவரது தங்கை உமா ஆகிய இருவரும் சொந்தமாக வீடு கிடைத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழத்தொடங்கினர். இதை பார்த்த கலெக்டர் ரோகிணி, அவர்களது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினார்.

மேலும், அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு ஏற்பாடு செய்து கொடுக்குமாறும், பழைய வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் புது வீட்டிற்கு எடுத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சேலம் டவுன் தாசில்தார் மாதேஷ்வரனுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து ஷாலினி கூறியதாவது:-

தாய் இறந்துவிட்டநிலையில், தந்தையும் கைவிட்டு விட்டதால் ஆதரவற்ற நிலையில் இருந்தோம். உறவினர்களின் உதவியோடு பெரமனூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். நானும், அண்ணன், தங்கையும் உள்ளோம். நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். தங்கை 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்ணன் உடல்நிலை பாதிப்பால் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.

எனது சூழ்நிலையை கலெக்டரிடம் எடுத்துக்கூறி வீடு ஒதுக்கீடு செய்து தருமாறு தெரிவித்தேன். அதன்படி எங்களது சூழ் நிலையை புரிந்து கொண்டு தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்