தக்கலை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்; கல்லூரி மாணவர் கைது

தக்கலை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். சக மாணவர்களுக்கு அவர் கஞ்சா சப்ளை செய்தது அம்பலமாகி உள்ளது.

Update: 2018-12-03 23:00 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கண்காணித்து வருகிறார்கள்.

தக்கலை போலீசார் நேற்று முன்தினம் இரவு குமாரகோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் அந்த வாலிபர், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் வாலிபரை விரட்டிச்சென்று குமாரகோவில் சந்திப்பு பகுதியில் மடக்கி பிடித்தனர்.

பின்னர், போலீசார் வாலிபரிடம் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதனால் வாலிபர் மீது சந்தேகம் வலுத்தது. உடனே அவரது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, அதில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கேரள மாநிலம் ஆலப்புழா முல்லசிகல் பகுதியை சேர்ந்த ஆதித்யன் (வயது 21) என்பதும், தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருவதும், கஞ்சாவை கேரளாவில் இருந்து கடத்தி வந்து கல்லூரியில் சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்