கஜா புயலால் மின்கம்பங்கள் சாய்ந்தன: வடபாதிமங்கலம் பகுதியில் 16 நாட்களுக்கு பிறகு மின்வினியோகம்

கஜா புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் 16 நாட்களுக்கு பிறகு வடபாதிமங்கலம் பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-12-03 22:30 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கஜா புயலால் 97 மின்கம்பங்களும், வடபாதிமங்கலம் பகுதியில் 360 மின்கம்பங்களும் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், உச்சுவாடி, கிளியனூர், மாயனூர், சோலாட்சி, பூசங்குடி, ஒகைப்பேரையூர், புனவாசல், அரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, திட்டச்சேரி, வடவேற்குடி, குலமாணிக்கம், ராமநாதபுரம், அன்னுக்குடி, மன்னஞ்சி, பெரியகொத்தூர், பழையனூர், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி, காடுவெட்டி, சித்தனங்குடி, பாரதிமூலங்குடி, மரக்கடை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி இருந்தன. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் தலைமையில் கூத்தாநல்லூர், கள்ளக்குறிச்சி, வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் 135 பேர் இரவு பகலாக சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் கூத்தாநல்லூர் நகர பகுதியில் சீரமைக்கப்பட்டு ஏற்கனவே மின்வினியோகம் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மன்னார்குடியில் இருந்து வடபாதிமங்கலம் வரக்கூடிய 33திறன் கொண்ட உயர் மின்அழுத்த மின்சாரம் சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் நிறைவு அடைந்தது. இதை தொடர்ந்து 16 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் மின்வினியோகம் செய்யப்பட்டது.

16 நாட்களுக்கு பிறகு வடபாதிமங்கலம் பகுதிகளில் மின்வினியோகம் வழங்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளையும் மழையிலும் இரவு, பகலாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கும் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்