கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-12-03 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி ஊருணி தெருவில் நகரசபைக்கு சொந்தமான கட்டிடத்தில் ரேஷன் கடை உள்ளது. அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி கீழ பார்க் ரோட்டில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, ரேஷன் கடையில் உணவுப்பொருட்களை வாங்கும் நிலை ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம், தாசில்தார் பரமசிவன், வட்ட வழங்கல் அலுவலர் வேலம்மாள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், கோவில்பட்டி ஊருணி தெருவில் புதிய ரேஷன் கடை கட்டும் வரையிலும், அதே பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை தற்காலிகமாக செயல்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்