தடுப்புச்சுவரில் ஆம்புலன்ஸ் மோதல்; சிகிச்சைக்கு சென்ற முதியவர் பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

கரூர் அருகே தடுப்புச் சுவரில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில், சிகிச்சைக்கு சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-12-03 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் கடவூர் வினோபாஜிபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 67). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், மயிலம்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த நிலையில் காய்ச்சலின் தாக்கம் அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு ஜெயராமனை நேற்றுமுன்தினம் இரவு அழைத்து வந்தனர். உடன் அவரது மனைவி வேலம்மாள் (63) இருந்தார். கரூர் வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தை கடந்து ஆம்புலன்ஸ் வந்த போது, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உள்ளே படுக்க வைக்கப்பட்டிருந்த ஜெயராமன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் குளித்தலை வட்டம் மேலவெளியூரை சேர்ந்த தங்கராஜ் (37), தொழில்நுட்ப உதவியாளர் ஆலந்தூரை சேர்ந்த ஆண்டிவேல் (38) மற்றும் ஜெயராமனின் மனைவி வேலம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மையதடுப்புசுவர் மீது மோதிய வேகத்தில் ஆம்புலன்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் தங்கராஜ் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மேலும் வெங்கக்கல்பட்டி பாலத்தின் இறக்கத்தில் விபத்து நிகழ்ந்ததால், அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வாகன விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் அங்கு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்ததும் ஜெயராமனின், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயராமனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்