பட்டா மாறுதல் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

தாராபுரத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

Update: 2018-12-04 00:00 GMT

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகரநிலவரி திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நில அளவையராக (சர்வேயர்) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கார்த்திக்வேல் (வயது 56) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பஸ்சில் வேலைக்கு வந்து செல்கிறார்.

இவரிடம், தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் வெள்ளித்தோட்டத்தை சேர்ந்த விவசாயி செந்தில் என்கிற அங்கமுத்து (36) என்பவர், தாராபுரம் நகராட்சி பகுதி ஆஷாநகரில் உள்ள வீட்டுமனையை தனது பெயருக்கு மாற்றம் செய்வது தொடர்பாக அணுகி அதற்கான விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். ஆனால் கடந்த ஒரு மாதமாக அந்த மனு மீது கார்த்திக்வேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக செந்தில், கார்த்திக்வேலை சந்தித்து, பட்டா மாறுதல் செய்ய காலதாமதம் ஏன்? ஏற்படுகிறது என்று கேட்டுள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தால்தான், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரூ.10 ஆயிரம் கொடுத்தால்போதும் பட்டா மாறுதல் உடனே செய்து தருகிறேன் என்று செந்திலிடம், கார்த்திக்வேல் கூறியுள்ளார். ஆனால் அந்த தொகையை கொடுக்க செந்திலுக்கு மனமில்லை. இதையடுத்து கார்த்திக்வேல் மீது திருப்பூர் லஞ்சஒழிப்பு போலீசில் செந்தில்புகார் செய்தார். அப்போது ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை கார்த்திக்வேலிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்திலிடம் கூறினார்கள். இதையடுத்து ரசாயனம் கலந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு செந்தில், நேற்று தாராபுரம் நகர நில அளவை திட்ட அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு பணியில்இருந்த நில அளவையர் கார்த்திக்வேலிடம், ரூ.10 ஆயிரத்தை செந்தில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி மற்றும் போலீசார் கார்த்திக்வேலை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் கார்த்திக்வேலை கைது செய்து அவரிடம், இருந்து ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்துஅவரிடம் போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள். தாராபுரத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்