ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. சொல்கிறார்

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை என்றும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-12-03 22:58 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் உதவியாளர், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் குதிரை பேரம் பற்றி பேசிய ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது உதவியாளர், துபாயை சேர்ந்த தொழில் அதிபரிடம் ஆபரேஷன் தாமரை பற்றி பேசியதாக சொல்கிறார்கள். அந்த உரையாடல் இந்தி மொழியில் உள்ளது. எனது உதவியாளருக்கு இந்தி தெரியாது. யாரோ பேசியதை, எனது உதவியாளரின் குரல் என்று சொல்வது சரியல்ல.

எனது உதவியாளர், தொழில் அதிபருடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அவ்வாறு பேசுவதாக இருந்தால், என்னிடம் தெரிவித்துவிட்டு தான் அவர் பேசி இருப்பார். ஆபரேஷன் தாமரை திட்டத்தை நாங்கள் கையில் எடுக்கவில்லை. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை.

ஊருக்கு வெளியே உள்ள பேயை, யாராவது வீட்டுக்குள் விடுவார்களா?. செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான உரையாடல் பதிவில் இருப்பது எனது உதவியாளரின் குரல் அல்ல. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். இது காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் செய்த சதி ஆகும். இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

மேலும் செய்திகள்