நாராயண் ரானேயுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு மராட்டிய அரசியலில் பரபரப்பு

நாராயண் ரானேயை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் திடீரென சந்தித்து பேசினார். இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-03 23:53 GMT
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கொங்கன் மண்டலத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் திடீரென கன்கவலியில் உள்ள சுவாபிமானி பக்சா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான நாராயண் ரானேயின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாராயண் ரானேயுடன், சரத்பவார் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து சரத்பவார் ரத்னகிரி புறப்பட்டு சென்றார்.

நாராயண் ரானேயை சரத் பவார் சந்தித்து பேசியிருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன.

இருப்பினும் அதை நாராயண் ரானேயின் மகனும், எம்.எல்.ஏ.வும் ஆன நிதேஷ் ரானே மறுத்தார். சரத்பவார் நாராயண் ராேனயை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று கூறினார். மற்றபடி இருவரது சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இருப்பினும் சரத்பவார் நாராயண் ரானேயை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொங்கன் மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியாக திகழும் நாராயண் ரானே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு சுவாபிமான் பக்சா தொடங்கினார். பின்னர் பா.ஜனதா ஆதரவுடன் அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனார்.

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா பா.ஜனதா அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்த நிலையில் இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் சிவசேனாவை சமாதானப்படுத்தி கூட்டணியை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே சிவசேனாவில் இருந்து மனகசப்புடன் வெளியேறி அக்கட்சியை விமர்சனம் செய்து வரும் நாராயண் ரானேக்கு சிவசேனா உடனான பா.ஜனதாவின் இந்த இணக்கமான போக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதை பயன்படுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி நாராயண் ரானேயை தன் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும், ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதியில் நாராயண் ரானேயை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க திட்டமிட்டு காயை சரத்பவார் நகர்த்துவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதற்கு முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நாராயண் ரானே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்