வேதாரண்யம் அருகே கார்-அரசு பஸ் மோதல் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் படுகாயம்

வேதாரண்யம் அருகே கார்- அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-12-04 22:15 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை வாய்மேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். தோப்புத்துறையை சேர்ந்தவர் விஜயகுமார் (45). இவர் தனது காரில் செந்தில்குமார் என்பவருடன் நாகையில் இருந்து வேதாரண்யத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். வேதாரண்யம் - நாகை மெயின்ரோட்டில் தேத்தாகுடி வடக்கு புதுரோடு அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்தது. கார் அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்தது.

இந்த விபத்தில் விஜயகுமார், செந்தில்குமார், பஸ்சில் பயணம் செய்த தாமரைப்புலத்தை சேர்ந்த பள்ளி மாணவன் அரவிந்த் (15), வேதாரண்யம் காந்தி நகரை சேர்ந்த நதியா (24) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் விஜயகுமார், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்