பள்ளிகொண்டா அருகே டிரைவர்-கிளனரை தாக்கி மினிலாரி கடத்தல் பொருட்கள் சாலையோரம் வீச்சு

பள்ளிகொண்டா அருகே டிரைவர், கிளனரை முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள் தாக்கிவிட்டு மினிலாரியை கடத்தி சென்று விட்டனர்.

Update: 2018-12-04 22:15 GMT
அணைக்கட்டு,

கன்னியாகுமரியை அடுத்த சந்தையடி அருகே தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டராஜா (வயது 29), லாரி டிரைவரான இவர் சொந்தமாக மினிலாரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டுக்கு மினிலாரியில் பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக மரச்சாமான்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இவருடன் கிளனராக அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் (53) என்பவர் வந்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கிங்கிணி அம்மன் கோவில் அருகே நள்ளிரவு 2 மணி அளவில் மினிலாரியை நிறுத்திவிட்டு நீலகண்டராஜா, சிவபாலன் ஆகியோர் இயற்கை உபாதையை கழிக்க சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு மினிலாரியை பெங்களூரு நோக்கி கடத்தி சென்றனர்.

அதில் இருந்து பீரோக்கள் உள்ளிட்ட பொருட்களை ஆம்பூர் அருகே மின்னூர் என்ற பகுதியில் சாலை யோரத்தில் வீசிவிட்டு மினிலாரியை ஓட்டிச் சென்றனர்.

இதுகுறித்து நீலகண்டராஜா பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மினிலாரியில் இருந்து வீசப்பட்ட பீரோ உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றி, மினிலாரியை கடத்தி சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்