ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-04 22:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமன் என்கிற நாராயணன் (வயது 52). இவரும் செஞ்சி அருகே கப்பை கிராமத்தை சேர்ந்த குமார் (45) என்பவரும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களிடம் செஞ்சி, திண்டிவனம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் ஆகிய சீட்டுகளில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சீட்டு பணம் முழுவதையும் கட்டி முடித்தபோதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஸ்ரீமனும், குமாரும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செஞ்சியை சேர்ந்த டாக்டர் அண்ணாமலை உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த ஸ்ரீமனை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் செஞ்சியில் இருந்து வெளியூருக்கு ஸ்ரீமன் தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், பிருந்தா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, ராமலிங்கம் ஆகியோர் செஞ்சிக்கு விரைந்து சென்று செஞ்சி கூட்டுசாலையில் வைத்து ஸ்ரீமனை மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் அவரை விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்ரீமன், குமார் ஆகிய இருவரும் சேர்ந்து செஞ்சி, திண்டிவனம் பகுதி மக்களிடம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 950 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீமனை போலீசார் கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்