ஈரோடு மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நோயாளிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-12-04 22:45 GMT

ஈரோடு,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்பத்திரிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று அரசு டாக்டர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்காக வந்த புறநோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளின் சிகிச்சை அறை மூடப்பட்டு இருந்தது. ஆனால் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. இதனால் அங்கு நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். மேலும், சிலர் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரபிரபு கூறியதாவது:–

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 70 டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டோம்.

ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகளில் பணியாற்றும் டாக்டர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 350 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு எங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்