அய்யலூர் அருகே: விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் அவமதிப்பு - போலீசார் விசாரணை

அய்யலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் அவமதிப்பு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-04 22:15 GMT
வடமதுரை, 

வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே வடுகபட்டியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு விநாயகர் கோவில் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடிக்கம்பம் ஒன்று நடப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த கொடிக்கம்பத்தை வேறு இடத்தில் நடும்படி கூறி வந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த கொடிக்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கம்பத்தில் இருந்த கட்சிக் கொடியை கிழித்து சேதப்படுத்தினர். பின்னர் கொடிக்கம்பத்தில் செருப்புகளை கட்டி தொங்கவிட்டு சென்றனர். நேற்று காலை கட்சியின் கொடிக்கம்பம் அவமதிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கட்சியின் கொடியை சேதப்படுத்தி, கொடிக்கம்பத்தை அவமதிப்பு செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்