கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து கிரேன் உரிமையாளர் சாவு காரிமங்கலம் அருகே பரிதாபம்

காரிமங்கலம் அருகே கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து கிரேன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-12-05 22:45 GMT
காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஜிட்டிகானஅள்ளியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 35). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் சிலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கிணற்றில் பாறைகளை வெடி வைத்து உடைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தொழிலாளர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி வேலை பார்த்து வந்தனர்.

உடைக்கப்பட்ட பாறைகளை கிரேன் மூலம் எடுக்க பூஞ்சோலை கொட்டாயை சேர்ந்த கிரேன் உரிமையாளர் மகேந்திரன்(40) என்பவர் சக பணியாளர்களுடன் கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்தார். இதையொட்டி அவர் கயிறு மூலம் கிணற்றில் இறங்க முயற்சி செய்துள்ளார்.

பாதி கிணற்றில் இறங்கி கொண்டிருந்தபோது திடீரென கயிறு அறுந்தது. இதில் மகேந்திரன் கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் இது குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்