காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-12-05 22:30 GMT
திருவள்ளூர்,

சென்னை மணலி புதுநகர் 270-வது பிளாக்கை சேர்ந்தவர் இன்பராஜ். அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 36). மகள் அனுபாரதி (17). இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் திருவழுதி நாடார்விளை கிராமம்.

இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்கள். தூத்துக்குடியில் இருந்த போது அவர்களது எதிர்வீட்டில் வசித்து வந்த ஜெயராமன் (28) அடிக்கடி அனுபாரதி வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் சென்னை வந்த அனுபாரதி மணலி புதுநகரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஜெயராமனும் சென்னையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து வந்தார். இருவரும் உறவினர்கள் என்பதால் அனுபாரதி வீட்டுக்கு ஜெயராமன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர் அனுபாரதியை ஒரு தலையாக காதலித்து வந்தார். அவர் அனுபாரதியை அணுகி தன்னுடைய காதலை தெரிவித்தார். அதற்கு அவர் தான் படித்து கொண்டிருப்பதாகவும், காதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என திட்டவட்டமாக கூறி இனிமேல் எங்கள் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் அனுபாரதி வீட்டுக்கு சென்று 2 முறை பெண் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர், தங்களது மகள் படித்து வருவதாகவும், தற்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி, நீ நல்ல வேலைக்கு சென்று சம்பாதித்த பிறகு திருமணத்தை பற்றி பேசலாம் என்று கூறியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த அவர் அனுபாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-3-2014 அன்று மீண்டும் ஜெயராமன் அனுபாரதி வீட்டுக்கு சென்று தனக்கு அனுபாரதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். அப்போது அவரது பெற்றோர் பெண் தர மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்பராஜ் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி கிருஷ்ணவேணி தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனுபாரதியிடம் ஜெயராமன் மீண்டும் தனது காதலை தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த அனுபாரதி, நான் உன்னை காதலிக்கவில்லை என உறுதியாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராமன் எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து உடலில் 32 இடங்களில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அனுபாரதி துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.

பின்னர் அங்கிருந்து ஜெயராமன் தப்பிச்சென்று விட்டார். இதை பார்த்த அவரது தாயார் கிருஷ்ணவேணி நடந்த சம்பவம் குறித்து சென்னை மணலிபுதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜெயராமனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று மாவட்ட நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார். கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெயராமனுக்கு ஆயுள் தண்டணையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக தனலட்சுமி வாதாடினார்.

மேலும் செய்திகள்