பெண்கள் கல்வி கற்பதன் மூலம் சமூக கொடுமைகளில் இருந்து விடுபடலாம்; துணைவேந்தர் பேச்சு

பெண்கள் கல்வி கற்பதன் மூலம் சமூக கொடுமைகளில் இருந்து விடுபடலாம் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

Update: 2018-12-05 22:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் போர்டு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பல்கலைக்கழகத்தில் வரதட்சணை ஒழிப்பே பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. இதில் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் பேராசிரியர் மணிமேகலை வரவேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆயிரம் ஆண்களுக்கு, 940 பெண்கள் இருப்பதாகவும், தினமும் 20 பெண்களில், ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பெண்கள் வரதட்சணை கொடுமையால் இறந்தாலும், குறைந்த அளவு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டுமெனில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று மன தைரியம் மற்றும் சமூகப் பொறுப்புடன் இருந்தால் வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசியதாவது, சமுதாயத்தில் வரதட்சணையை ஒரு கருவியாக பயன்படுத்தி பெண்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் மன உளைச்சல்கள் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

பெண்கள் கல்வி கற்பதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு வழி பிறக்கிறது. மேலும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வது மட்டுமல்லாமல், வரதட்சணை போன்ற சமூக கொடுமைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும் என்றார்.

இதில் மூத்த வக்கீல் மணிகண்டன் பேசும் போது, வரதட்சணை கொடுமையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெண்களுக்கான நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம் மற்றும் மகளிர் காவல் நிலையம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பெண்களை பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் பல கொடுமைகளை தடுக்க முடியும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவ–மாணவிகளுக்கு யுனிசெப் நிறுவனம் தயாரித்த குறும் படத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் போர்டு தொண்டு நிறுவன இயக்குனர் அழகராசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்