வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ராசிபுரம் என்ஜினீயரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை சேலம் கோர்ட்டில் தீர்ப்பு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்த மும்பையை சேர்ந்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-12-05 22:30 GMT
சேலம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 43), என்ஜினீயர். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார். அப்போது மும்பையை சேர்ந்த மகேந்திரராமன்லால்ஷா (66) என்பவர் ஆன்லைன் மூலம் இவரை தொடர்பு கொண்டு, மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை உள்ளது. பணம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை நம்பிய அவர் கடந்த 2012-ம் ஆண்டில் 3 தவணைகளில் மொத்தம் ரூ.13½ லட்சத்தை ஆன்லைன் மூலம் கட்டி உள்ளார். ஆனால் முத்துசாமிக்கு வேலை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் மகேந்திரராமன்லால்ஷாவை தொடர்பு கொண்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இந்நிலையில் மகேந்திரராமன்லால்ஷா தலைமறைவாகி விட்டது அவருக்கு தெரிந்தது.

இது குறித்து முத்துசாமி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரராமன்லால்ஷாவை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரராமன்லால்ஷாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு மைதிலி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்