போலி ரசீது தயாரித்து மோசடி செய்த வழக்கில்: வக்கீலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

போலி ரசீது தயாரித்து மோசடி செய்த வழக்கில் திட்டக்குடி வக்கீலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

Update: 2018-12-05 22:00 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நிதி (வயது 38). இவர், கடந்த 2010-2011-ம் ஆண்டுக்கான சட்டசபை நிகழ்வுகள் குறித்த தகவல்களை தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக சட்டசபை சார்பு செயலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது. அந்த தகவல்கள் குறித்த நகல்களை வழங்குவதற்கு 12 ஆயிரத்து 830 ரூபாயை கருவூலத்தில் செலுத்துமாறு அவரிடம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் வக்கீல் அருள்நிதி, கருவூலத்தில் 30 ரூபாய் மட்டும் செலுத்தி விட்டு, ரசீதில்(செலான்) ரூ.12,830 செலுத்தியதாக திருத்தம் செய்து சட்டசபை சார்பு செயலாளர் அலுவலகத்தில் கொடுத்து உள்ளார்.

சட்டசபை அலுவலக அதிகாரிகள், அந்த ரசீதை வாங்கி பார்த்த போது, திருத்தம் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அருள்நிதி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு சட்டசபை சார்பு செயலாளர் பரிந்துரைத்தார்.

இதையடுத்து அருள்நிதி மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன் பேரில், போலி ரசீது தயாரித்து மோசடி செய்ததாக வக்கீல் அருள்நிதி மீது கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், அருள்நிதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்திய தண்டனை சட்டம் 465-ன் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 471 மற்றும் 420-வது பிரிவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். மேலும் இந்த தண்டனைகளை அருள்நிதி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார். அதன்படி அருள்நிதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்