ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் இயக்குனர் அமீர் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று இயக்குனர் அமீர் பேட்டி அளித்தார்.

Update: 2018-12-05 23:00 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்த விரக்தியில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் அமீர், தமிழக அரசை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று அமீர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனையடுத்து டிசம்பர் 20-ந் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த அமீர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டிதரப்படும் என்றார். உடனடியாக மத்திய அரசு கட்டி தந்தால் பா.ஜ.க.-வுக்கு நான் வாக்களிக்க தயார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தையாகும். இதில் தமிழக அரசு, மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படுகிறது.

கஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசும், மத்திய அரசும் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாமலேயே உள்ளது. இதனால் தான் இதுவரை புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. ஒகேனக்கலில் அணை கட்டலாம் என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கூறியது மகிழ்ச்சி. நடைபெறவுள்ள சிறப்பு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்