திருப்பூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-05 22:15 GMT
திருப்பூர்,

தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட மாறுதல், கூடுதல் பொறுப்பு ஊதியம், உட்பிரிவு மற்றும் நகர அளவை பட்டா மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை மற்றும் பணியிடம் சார்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை நடந்தது. விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் முன்பு வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட 5 கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருப்பூர் வடக்கு வட்டக்கிளை தலைவரும், தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலருமான சுபாஷ் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர், நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். இதில் வேலம்பாளையம், மண்ணரை, செட்டிபாளையத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு பல்லடம் வட்ட கிளை தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதுபோல் திருப்பூர் தெற்கு, அவினாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவில் 200 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்