திருப்பூர் மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலி

திருப்பூர் மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்கள்.

Update: 2018-12-05 23:00 GMT
முத்தூர்,

நத்தக்காடையூர் அருகே உள்ள அர்ச்சுனநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் முத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விமலா (42). இவர்களது மகள் ரித்திகா (18). ஈரோடு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர்களது மகன் பிரதீப் (16). முத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் விமலாவுக்கு கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சரவணன், விமலாவை நத்தக்காடையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர் வீடு திரும்பிய விமலாவுக்கு 2 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமலா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் காய்ச்சல் முழுமையாக குணமடையாததால் கடந்த 30-ந்தேதி விமலா ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து விமலாவிற்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனையில் விமலாவிற்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் பன்றிக்காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விமலா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நத்தக்காடையூர் பகுதியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அசன் முகமது (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதியடைந்து வந்தார். இதற்காக இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குறைய வில்லை. இதையடுத்து அவர் கடந்த 5-ந் தேதி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை டாக்டர்கள் சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.


மேலும் செய்திகள்