வாட்ஸ்-அப்பில் படத்தை வெளியிட்டதால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை காதலன் கைது

வாட்ஸ் -அப்பில் படத்தை வெளியிட்டதால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-06 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் ஜீவா (வயது 20). காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கண்ணன் (24) என்பவரை ஜீவா காதலித்தார். கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் காதல் ஜீவாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை பெற்றோர் கண்டித்தனர். அதற்கு பிறகு கண்ணனுடன் பேசுவதை ஜீவா தவிர்த்து வந்தார்.

என்னுடன் பேசாவிட்டால், நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வாட்ஸ்- அப்பில் அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்று கண்ணன், ஜீவாவை மிரட்டியுள்ளார்.

இதை ஜீவா கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜீவாவும், கண்ணனும் இருக்கும் படத்தை வாட்ஸ்- அப்பில் கண்ணன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், காஞ்சீபுரம் மாகரல் போலீசார் விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, களக்காட்டூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாகரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், கண்ணனை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

இதுதொடர்பாக மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை கண்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்