நாமக்கல்லில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-06 22:45 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாமக்கல்லில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு-2019’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி, நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கலெக்டர் ஆசியா மரியம், அரசு அலுவலர்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். இதையடுத்து ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர் ரோடு, மணிக்கூண்டு, திருச்சி ரோடு வழியாக சென்றது. இதில் அரசு பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

அப்போது பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலை காப்போம், பிளாஸ்டிக்கின் புகை உலகிற்கு பகை என கோஷமிட்டபடி நடந்து சென்றனர். பின்னர் ஊர்வலம் மீண்டும் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் முடிவுற்றது. இதையடுத்து மாணவர்களுக்கு துணிப்பைகளும், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார், குணசேகரன், கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்