ஜாமீனில் விடுவிக்கப்பட்டவரை: சிறை வளாகத்துக்குள் மற்றொரு வழக்கில் கைது செய்ய எதிர்ப்பு - போலீசுடன் வக்கீல்கள் வாக்குவாதம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கைதியை, சிறை வளாகத்துக்குள் மற்றொரு வழக்கில் போலீஸ் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-06 22:15 GMT
கோவை,

தேனி மாவட்டம் சுருளி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 39). தாராபுரம், மூலனூர் பகுதியில் நடைபெற்ற கடத்தல் தொடர்பாக இவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு கோவை சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக ஜெயக்குமார் மீது போலீசுக்கு சந்தேகம் இருந்தது. இவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்து இருந்தனர். ஜெயக்குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்படும் தகவலை அறிந்த ஆமத்தூர் போலீசார் கோவை சிறை வளாகத்துக்கு வந்தனர்.

ஜெயக்குமார் தரப்பு வக்கீல்கள் பி.சந்துரு, சத்யேந்திரன், சுப்பிரமணிய பாரதி ஆகியோர் அவரை அழைத்து செல்ல கோவை சிறைக்கு வந்து இருந்தனர். விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரை, சிறை வளாகத்துக்குள் விருதுநகர் போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். இதனால் சிறை வளாகத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

சிறை வளாகத்துக்குள் ஜெயக்குமாரை கைது செய்ய அவரது வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். ஜெயக்குமாரை கைது செய்ய போலீசார் வாரண்டு உத்தரவு கொண்டு வந்துள்ளனரா? என்று போலீசார் வக்கீலிடம் கேட்டனர். வாக்குவாதம் ஏற்பட்டதால் வக்கீல்களின் கோரிக்கையை ஏற்று சிறை காவலர்கள் உதவியுடன் ஜெயக்குமாரை சிறை வளாகத்தில் இருந்து சிறைக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

அப்போது போலீசார் அவரை கைது செய்து காரில் ஏற்றினார்கள். வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசகாயம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சிறைக்கு வெளியே கைது செய்யலாம் என்பதால் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஜெயக்குமாரை விருதுநகர் ஆமத்தூர் பகுதிக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து வக்கீல் பி.சந்துருகூறும்போது, கைதியை அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் வந்து இருந்தனர். மற்றொரு வழக்கில் அவரை போலீசார் கைது செய்ய வேண்டுமானால் பிடிவாரண்டு உத்தரவு இருக்க வேண்டும். சிறை வளாகத்துக்குள் கைதியை பிடித்து செல்லகூடாது என்பதால்தான் எதிர்ப்பு தெரிவித்தோம் என்று கூறினார். இந்த சம்பவத்தினால் கோவை சிறை முன்பு நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்