அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் நடந்த மோசடிக்கு உடந்தை: உதவி தொடக்கக்கல்வி பெண் அலுவலருக்கு 4 ஆண்டு ஜெயில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் நடந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த உதவி தொடக்கக்கல்வி பெண் அலுவலருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-12-06 22:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் அப்துல்ஷேக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 2012-ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து பள்ளியில் அதிக மாணவர்கள் படிப்பதாக அரசுக்கு கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு அப்போதைய உதவி தொடக்கக்கல்வி அலுவலர், லஞ்சம் பெற்று உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து அப்துல்ஷேக் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அந்த பள்ளிக்கு சென்று சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் பள்ளி தாளாளரும், தலைமை ஆசிரியருமான கஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2012-ம் ஆண்டு வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்த பூங்கோதை (வயது 47) லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக பள்ளி தாளாளர் கஜலட்சுமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பூங்கோதை ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பூங்கோதை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து பூங்கோதை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘பூங்கோதை மீதான குற்றம் நிரூபணமாகும் வரை அவரை பணிபுரிய அனுமதிக்கும்படி’ உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பாரி விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் நடந்த மோசடிக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருந்த பூங்கோதைக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின்படி 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பலத்த காவலுடன் பூங்கோதை வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜோலார்பேட்டை அருகேயுள்ள காட்டூர் பேரூராட்சி நடுநிலைப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பூங்கோதை பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்