புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு நிவாரணம் வழங்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு நிவாரணம் வழங்கவில்லை எனகூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-06 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் ஊராட்சியில் சுமார் 1,300 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். புயலின் தாக்குதலில் இவர்கள் அனைவரும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடு, விவசாயம், கால்நடைகள், தொழில்கள் என அனைத்தையும் இழந்து எதிர்காலத்தை எண்ணி தவித்து வருகின்றனர். இந்நிலையில் புயலால் வீடு இழந்தவர்கள் என கூறி 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரேஷன் கடைமூலம் மண்எண்ணெய், அரிசி வழங்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரியிடம் விசாரித்த போது மழையூர் பகுதியில் 100 குடும்பத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ரெங்கமாள்சத்திரம், காமராஜநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அரசு சார்பில் மண் எண்ணெய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் வடசேரிப்பட்டி கிராம மக்களுக்கும் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என கோரி பொதுமக்கள் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் தாசில்தார் கபேரியல் சார்லஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதேபோல் அம்மாசத்திரத்தில் நிவாரண பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்