மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது புதுச்சேரி சட்டசபைக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

Update: 2018-12-06 22:46 GMT
புதுடெல்லி,

புதுச்சேரி சட்ட சபைக்கு அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர். மத்திய அரசு மேற்கொண்ட இந்த நியமனங்களுக்கு புதுச்சேரி மாநில காங்கிரசார் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நியமனங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது செல்லும் என்று தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், மற்றும் எஸ்.தனலட்சுமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறை யீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இந்த அமர்வில் கடந்த ஜூலை 19-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க முடியாது என்றும், எனவே, இந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு, நியமன எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதுச்சேரி தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று சபாநாயகர் வைத்திலிங்கம், நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகிய 3 பேரையும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளித்தார்.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அதே அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன் மற்றும் எஸ்.தனலட்சுமி ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், நியமன எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் ரஞ்சித்குமார், மத்திய அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் வாதாடி வந்தனர்.

கடந்த மாதம் 20-ந் தேதி இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- புதுச்சேரி ஒரு மாநிலம் அல்ல. நிர்வாக ரீதியாக யூனியன் பிரதேசங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. யூனியன் பிரதேச சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்வதற்கு, அந்த யூனியன் பிரதேச அரசின் ஒப்புதல் தேவை இல்லை. அவர்கள் இது குறித்து பரிந்துரை வழங்கினால் மத்திய அரசு அதனை பரிசீலிக்கலாம். நியமன எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க முடியாது என்று எதிர்தரப்பினர் கூறும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

புதுச்சேரி சட்டசபைக்கு 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும். இது குறித்து ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்