சோழத்தரம் அருகே: வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சோழத்தரம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-06 21:30 GMT
சேத்தியாத்தோப்பு, 

சோழத்தரம் அருகே பாளையங்கோட்டை கடைவீதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 40). இவர் தனது வீட்டுக்கு அருகே இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியப்பன் தனது வீட்டை பூட்டை விட்டு மனைவி பழனியம்மாளுடன் மதுரை சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலை பழனியம்மாள் மட்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவை சோதனை செய்து பார்த்த போது அதில் வைத்திருந்த 20 பவுன் நகையை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், சோழத்தரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்பம்பிடித்தபடி பின்வாசல் வழியாக பாளையங்கோட்டை பஸ் நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர் குமார், கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்