ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை: தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை நடந்து வருவதால் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2018-12-07 22:30 GMT
தூத்துக்குடி, 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை நடந்து வருவதால் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 6 இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.

இந்த குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து கடந்த மாதம் 26-ந்தேதி தனது அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அதில் சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வழக்கு விசாரணை

இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும், அந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு (நேற்று) தள்ளி வைத்தார்.

அதன்படி நேற்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை நடந்தது.

போலீசார் குவிப்பு

இதற்கிடையே, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், கடந்த மே மாதம் 22, 23-ந் தேதிகளில் கலவரம் நடந்த இடங்களில் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சிப்காட் பகுதி, திரேஸ்புரம், தெற்கு கடற்கரை சாலை உள்ளிட்ட 6 இடங்களில் கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா நிறுத்தப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கலவரம் ஏற்பட்ட தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு, வி.வி.டி. சிக்னல் பகுதி, எப்.சி.ஐ. குடோன் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்