போச்சம்பள்ளி அருகே 2 கடைகளின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் செல்போன் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

போச்சம்பள்ளி அருகே 2 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-07 22:45 GMT
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் மத்தூர் செல்லும் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். ஊத்தங்கரையை சேர்ந்தவர் மணிமாறன். இவரும் போச்சம்பள்ளி அருகே மத்தூர் செல்லும் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் செல்போன் கடைகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் 2 கடைகளிலும் இருந்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிமாறன் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம கும்பல் காரில் வந்து கடையின் கதவை உடைக்க முயற்சி செய்கின்றனர். உடைக்க முடியாததால் கதவில் கயிறை கட்டி, அதனை காரிலும் கட்டி இழுக்கின்றனர். அப்போது கதவு உடைந்ததும் கடைக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்