லாரி டிரைவர் கொலை வழக்கில் பொக்லைன் ஆபரேட்டருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

லாரி டிரைவர் கொலை வழக்கில் பொக்லைன் ஆபரேட்டருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-12-07 21:30 GMT
தூத்துக்குடி, 

லாரி டிரைவர் கொலை வழக்கில் பொக்லைன் ஆபரேட்டருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

லாரி டிரைவர்

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் ராஜா என்ற மகராஜா (வயது 29), லாரி டிரைவர். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த பேச்சி மகன் பெரியசாமி (28). இவர் முத்தையாபுரத்தில் தங்கி, அதே லாரி ஷெட் நிறுவனத்தில் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

கொலை

இந்த நிலையில் ஸ்பிக் நிறுவனத்தின் பின்புறம் உள்ள உப்பள யார்டில் ஜிப்சம் வாரும் பணி கடந்த 10.10.2016 அன்று நடந்தது. அங்கு பெரியசாமி பொக்லைன் எந்திரம் மூலம் ஜிப்சம் அள்ளும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஜிப்சம் எடுத்து செல்வதற்காக ராஜா லாரியில் அங்கு வந்தார்.

பெரியசாமி பொக்லைன் எந்திரம் மூலம் ஜிப்சத்தை லாரியில் ஏற்றி கொண்டு இருந்தபோது, அதன் பக்கெட் ராஜா ஓட்டி வந்த லாரியில் லேசாக இடித்தது. இதில் ராஜாவுக்கும் பெரியசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெரியசாமி பொக்லைன் எந்திர பக்கெட்டால் ராஜை அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

10 ஆண்டு சிறை

இந்த கொலை குறித்து அப்போதைய முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் லாரி டிரைவர் ராஜாவை கொலை செய்த குற்றத்துக்காக பொக்லைன் ஆபரேட்டர் பெரியசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத்தை கட்ட தவறினால் அவருக்கு கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

மேலும் செய்திகள்