கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-07 22:00 GMT
கோவில்பட்டி, 

21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் கணேச பெருமாள் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் அனைவருக்கும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கணினிவழி சான்றுகள் வழங்குவதற்கு நவீன கணினிகள், இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

சங்க மாநில முதன்மை பொதுச்செயலாளர் வெங்கடேசுவரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் பாலமுருகன், அமைப்பு செயலாளர் சிவகுமார், பிரசார அணி செயலாளர் விசுவநாதன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், நாளை மறுநாளில் (திங்கட்கிழமை) இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக, கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்