கடந்த ஆண்டு, கொடி நாள் நிதி ரூ.79 லட்சம் வசூல் செய்து சாதனை கலெக்டர் மலர்விழி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.79 லட்சம் கொடி நாள் வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர் விழி தெரிவித்தார்.

Update: 2018-12-07 22:15 GMT
தர்மபுரி,

படைவீரர்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் படைவீரர் கொடிநாள் வசூல் மாவட்டம் வாரியாக நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் படை வீரர் கொடிநாள் வசூல் பணி தொடக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கொடிநாள் வசூல் பணியை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ராஜன், நல அமைப்பாளர் பெருமாள் உள்பட அரசு ஊழியர்கள், மாணவர்கள் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசால் தர்மபுரி மாவட்டத்திற்கு படைவீரர் கொடிநாள் வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.50 லட்சத்து 86 ஆயிரத்து 800 ஆகும். அந்த இலக்கை தாண்டி ரூ.79 லட்சத்து 34 ஆயிரத்திற்கு மேல் வசூல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு படைவீரர் கொடிநாள் வசூல் செய்ய தர்மபுரி மாவட்டத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ.55 லட்சத்து 95 ஆயிரத்து 500 ஆகும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இலக்கை மிஞ்சும் வகையில் கொடிநாள் வசூலுக்கு அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அதிக நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்