கொடைக்கானல் அருகே: கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

கொடைக்கானல் அருகே கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-07 22:15 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி கோம்பை அருகே உள்ள கருக்காசோலை என்ற பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கு பீன்ஸ் சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் அவர், பீன்ஸ் பயிருடன் கஞ்சா பயிரிட்டிருப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பீன்ஸ் பயிர்களுக்கு இடையிடையே 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார், கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சொந்த உபயோகத்துக்காகவும், தனது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காகவும் கஞ்சா பயிரிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்