பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-07 22:00 GMT
சேலம், 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட மையம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் துரைசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

உண்ணாவிரத போராட்டத்தின்போது, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் வழங்குவதோடு, வருங்காலத்தில் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிவதால் அவர்களுக்கு வசதியாக கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக கணினி வழி சான்றுகளை சொந்த செலவில் கிராம நிர்வாக அலுவலர்கள் கையாள்வதால் உடனடியாக இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித்தகுதியினை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். நிர்வாக வசதிகளுக்காக புதிய கிராம நிர்வாகத்துறை ஏற்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு அதற்கு ஏற்றாற்போல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கணினி மூலம் சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கினால் போதுமா? அதை பயன்படுத்த இணைய வசதி கொடுக்க வேண்டாமா?. கடந்த 5 ஆண்டுகளாக தங்களது சொந்த செலவில் இணையதள வசதியை பயன்படுத்தி வருகிறோம், என்றார்.

மேலும் செய்திகள்