அரசு டாக்டர்கள் போராட்டம் ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டில் தகவல்

போராட்டத்தை ஒத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தனர்.

Update: 2018-12-07 21:45 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த முகமது யூனிஸ்ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் 4–ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்போவதில்லை என்றும் அறிவித்தனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே டாக்டர்களின் வேலைநிறுத்தத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று முன்தினம் அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக சுகாதாரத்துறைக்கும், அரசு டாக்டர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உரிய பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டி முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு, டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும். ஆனால் தற்போது அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்’’ என்று வாதாடினார்.

அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் தன்னுடைய வாதத்தில், ‘‘மத்திய அரசு டாக்டர்கள், பிற மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழக அரசு டாக்டர்களுக்கு மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு டாக்டர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வும் வழங்கப்படாமல் தாமதிக்கப்படுகிறது. இவற்றை முறையாக அளிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. எனவேதான் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். கோர்ட்டு கேட்டுக்கொண்டதன் பேரில் டாக்டர்கள் தங்களின் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்’’, என்றார்.

விசாரணை முடிவில், டாக்டர்களின் கோரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி எப்போது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்? அந்த அறிக்கை அடிப்படையில் டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்ற எவ்வளவு காலம் ஆகும்? என்பதை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை 17–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்