சிருங்கேரி சாரதம்மன் கோவிலில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு யாகம்

சிருங்கேரி சாரதம்மன் கோவிலில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு யாகம் நடத்தினார்.

Update: 2018-12-07 22:30 GMT
சிக்கமகளூரு, 

சிருங்கேரி சாரதம்மன் கோவிலில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு யாகம் நடத்தினார்.

கூட்டணி ஆட்சி

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் கூட்டணி ஆட்சிக்கு தொடர்ந்து ஆபத்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. பா.ஜனதாவினர் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்காரணமாக தனது தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழாமல் இருக்க முதல்-மந்திரி குமாரசாமி மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவிலில் சிறப்பு பூஜை செய்து வருகிறார்.

இந்திரா உணவகம் திறப்பு

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் உள்ள சாரதம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்துவதற்காக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் சிக்கமகளூருவுக்கு வந்தார். பின்னர் அவர், அங்கிருந்து சிருங்கேரிக்கு சென்றார். அங்கு பஸ் நிலையம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்திரா உணவகத்தை முதல்-மந்திரி குமாரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர், அங்கு உணவு சாப்பிட்டார்.

முதல்-மந்திரி குமாரசாமி, முதல் முறையாக சிருங்கேரியில் தான் இந்திரா உணவகத்தை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர், சாரதம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அவர், நேற்று முன்தினம் இரவு கொப்பாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

குமாரசாமி சிறப்பு யாகம்

இந்த நிலையில் நேற்று காலை அவர் மீண்டும் சிருங்கேரி சாரதம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அவர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தினார். நேற்று மதியம் வரை இந்த யாகம் நடந்தது.

இந்த யாகம் முடிந்த பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மாநில மக்களின் நலனுக்காகவும், மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. என் பதவியை காப்பாற்ற இந்த யாகத்தை நான் நடத்தவில்லை. என்னுடைய மகன் நிகில் கவுடா திருமணம் குறித்து சிருங்கேரி மடாதிபதியிடம் ஆலோசனை கேட்டோம்.

துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவக்குமார சுவாமியின் உடல் நலம் குறித்து நான் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். அவருடைய உடல் நலம் குறித்து மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அவர் விரைவில் குணமாகிவிடுவார் என்றார்.

இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி அங்கிருந்து புறப்பட்டு குடகிற்கு சென்றார்.

மேலும் செய்திகள்