ராஜாக்கமங்கலம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-07 22:37 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜாக்கமங்கலம் அருகே கீழசங்கரன்குழியை சேர்ந்தவர் குமரேசன், கூலி தொழிலாளி. இவருடைய மகன் பிரதீப் (வயது 24), டிப்ளமோ என்ஜினீயர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். ஆனால், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.

இதையடுத்து ஊருக்கு வந்தார். இங்கு பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பிரதீப் மனமுடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று காலையில் பிரதீப் பெற்றோர் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். வீட்டில் பிரதீப் மட்டும் தனியாக இருந்தார். மாலையில் பெற்றோர் திரும்ப வந்த போது, பிரதீப் பிணமாக மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்