இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ந் தேதி வெளியீடு உதவி கலெக்டர் தகவல்

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 4-ந் தேதி வெளியிடப்பட உள்ளது என்று காட்பாடியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் மெகராஜ் கூறினார்.

Update: 2018-12-08 22:45 GMT

காட்பாடி, 

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நேற்று நடந்தது. வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். 1-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், துணைதாசில்தார் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி தாசில்தார் சதீஷ் வரவேற்றார். இதில், அனைத்து கட்சிகளின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வேலூர் மாநகராட்சி 1-வது வார்டில் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி 120 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதில், பலர் இறந்து விட்டதாக கூறி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தற்போதும் அதே முகவரியில் வசித்து வருகின்றனர். அவர்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் முகாம் நடத்துவது போன்று இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் அந்த வார்டில் இறந்தவர்களை கேட்டறிந்து நீக்க முடியும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. ஒரே குடும்பத்தினர் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவற்றை கேட்டறிந்த உதவி கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவைகள் சரி பார்க்கப்பட்டு வருகிறது. ஜனவரி 4-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அதில், பெயர்கள் விடுபட்டு இருந்தாலோ, இறந்தவர்கள் பெயர் இருந்தாலோ அவை குறித்து தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்களின் அருகே ‘டி’ என்றால் இறந்துவிட்டார் என்றும், ‘ஏ’ என்றால் வாக்காளர் முகவரியில் இல்லை என்றும், ‘எஸ்’ என்றால் வேறு முகவரிக்கு சென்று விட்டார் என்றும் அர்த்தம்.

இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் வாக்குச்சாவடி முகவர்கள் என்னிடம், தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கருத்து தெரிவிக்கலாம். இறந்ததாக கருதி பெயர் நீக்கம் செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து வருகிற 12-ந் தேதிக்குள் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்