படைவீரர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடியில் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Update: 2018-12-08 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

படைவீரர் கொடிநாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 31 முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக போரின்போது வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது;-

உலகில் அமைதியான நாடுகளால் தான் சீரான வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றமடைய முடியும். அங்கு தான் தொழில்கள் பெருகும். நமது நாடு வளர்ச்சியடைய அமைதியான சூழ்நிலைக்கு முப்படை வீரர்களின் பங்கு மிகவும் அவசியமானதாகும்.

நம்நாடு அமைதியுடன் இருக்க இரவு பகல், பாராமல் நமக்காக கடினமான பணிகளை செய்து வருகின்றனர். கடினமான பணிகளை செய்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு என மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொடி நாள் நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ள அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொழில் தொடங்கிட தேவையான உதவிகளும் செய்து தரப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி நாள் நிதி கடந்த ஆண்டு ரூ.87 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 15 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், தூத்துக்குடி மாவட்ட முப்படை வீரர் வாரிய துணை தலைவர் கர்னல் சுந்தரம், தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் கர்னல் நாகராஜன், தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் மதி.எஸ்.சுஜாதா மற்றும் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்