தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டம் கடலூர் அருகே பரபரப்பு

கடலூர் அருகே தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-08 23:15 GMT
நெல்லிக்குப்பம், 

கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சியில் தாழ்வான பகுதியில் உள்ள ஒரு தெருவில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் அந்த தெருவில் தண்ணீர் தேங்கியது. வடிகால் வசதி இல்லாததால் தெருவில் தேங்கிய மழைநீருடன், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அந்த தெரு வழியாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி அந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் வசிப்பவர்களை கடித்து, நோய் ஏற்படுத்த காரணமாக அமைகிறது. தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் கிராம மக்கள், தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் நாற்காலிகளை போட்டு, அதில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்