கழுகுமலையில் இருதரப்பினர் மோதல்; 9 பேர் மீது வழக்கு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கழுகுமலையில் இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-12-08 21:30 GMT
கழுகுமலை, 

கழுகுமலையில் இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

9 பேர் மீது வழக்குப்பதிவு

கழுகுமலை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவர்களது வீட்டின் முன்புள்ள வாறுகாலில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக, இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

இதுதொடர்பாக சம்பவத்தன்று முருகனுக்கும், பாலகிருஷ்ணன் மகன் காளிச்சாமிக்கும் (34) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், காளிச்சாமி, அவருடைய அண்ணன்கள் கண்ணன், மாடசாமி, தங்கைகள் லட்சுமி, மீனாட்சி ஆகிய 5 பேர் மீதும், காளிச்சாமி அளித்த புகாரின்பேரில், முருகன், அவருடைய மனைவி உஷா, தாயார் கிருஷ்ணம்மாள், தங்கை செல்வி ஆகிய 4 பேர் மீதும் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையே உஷா தன்னுடைய குடும்பத்தினர் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி, நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள பொது கழிப்பிடம் அருகில் தன்னுடைய 2 குழந்தைகளுடன் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே கழுகுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உஷா மற்றும் அவருடைய 2 குழந்தைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்