நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க குழு மலையாள திரைப்பட இயக்குனர் கோரிக்கை

நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க குழு அமைக்க வேண்டும் என்று மலையாள திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ கூறினார்.

Update: 2018-12-08 22:30 GMT

ஊட்டி,

ஊட்டி பிலிம் சங்கம் மூலம் தெற்காசிய அளவிலான குறும்பட விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் சிறந்த 90 குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. விழாவில் கலந்துகொண்ட கேரளாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ நேற்று ஊட்டியில் ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டம் ஊட்டி மிகவும் அழகான இடமாகும். ஊட்டியில் குறைந்த எண்ணிக்கையில் திரையரங்குகள் உள்ளது. இங்கு குறும்பட விழா நடத்துவது வரவேற்கத்தக்கது. நான் இந்த விழாவை மனமார பாராட்டுகிறேன். சிறிய இயக்குனர்கள் தங்களது திறமையை வெளிக்கொணரும் வகையில், குறும்படங்களை தயாரித்து வருகிறார்கள். சினிமா துறைக்கு மொழிகள் இல்லை. ஆனால், திரைப்படமே மொழியாக உள்ளது. ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வீடு மற்றும் 3 நபர்கள் இருந்தால் குறும்படத்தை தயாரிக்கலாம். இந்த சிந்தனைகள் தற்போது இளம் இயக்குனர்கள் மனதில் உருவாகி உள்ளது. குறும்படத்தின் மூலம் 5 நிமிடத்தில் நல்ல வி‌ஷயங்களை பல லட்சம் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, நவீன தொழில்நுட்பம் மூலம் வாட்ஸ் அப், முகநூல் மூலம் வெளியிடலாம்.

நல்ல கருத்துகளை குறும்படங்கள் வழியாக மக்கள் இடையே விரைந்து கொண்டு செல்ல முடியும். நாடகம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மட்டுமே கொண்டு செல்லலாம். ஆனால், குறும்படங்கள் வேகமாக மக்கள் மத்தியில் செல்லும். நீலகிரி மாவட்டம் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக உள்ளது. நான் பல மலையாள திரைப்படங்களை ஊட்டியில் படமாக்கி உள்ளேன். தற்போது ஊட்டிக்கு தயாரிப்பாளர்கள் வருகை குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு, சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி பெற பல நபர்கள் இடைத்தரகர்ளாக இருந்து அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறி அதிகமான பணத்தை பெறுவதே ஆகும்.

இந்த விவரங்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் நான் தெரிவித்தேன். தமிழக அரசு நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் வகையில், மாவட்ட கலெக்டர், உயர் வன அதிகாரி மற்றும் நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து படப்பிடிப்புக்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உடனடியாக அனுமதி பெறும் பொருட்டு வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் ஊட்டிக்கு அதிகமான சினிமா தயாரிப்பாளர்கள் வருவார்கள். நான் விரைவில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரு திரைப்படம் ஊட்டியில் இயக்க உள்ளேன். குறும்பட விழா நடத்த மாவட்ட கலெக்டர் உதவி இருப்பது சுற்றுலா பயணிகளை அதிகமாக ஊட்டிக்கு வரவழைக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஊட்டி பிலிம் சங்க தலைவர் பாலநந்தகுமார் உடனிருந்தார். விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் செய்திகள்