நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 625 வழக்குகளுக்கு தீர்வு

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 625 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-12-08 22:15 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை தலைமை தாங்கி பல்வேறு வழக்குகளை சமரசம் செய்து வைத்தார். ஊட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தில் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதில் நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான சுரேஷ்குமார், ஊட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, குற்றவியல் நீதிபதி செந்தில்குமார் ராஜ்வேல் ஆகியோர் நிலுவையில் இருந்த வழக்குகளை எடுத்து சமரச தீர்வு கண்டனர்.

கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் ஸ்ரீதரன் தலைமையிலும், குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி செல்லதுரை தலைமையிலும், கூடலூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி சரவணன் தலைமையிலும், பந்தலூர் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் செந்தில் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், மின்துறை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன நஷ்டஈடு கோரும் வழக்குகள், குடும்ப பிரச்சினை சம்மந்தமான வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாரா கடன் சம்மந்தமான அனைத்து வகை வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த ஆயிரத்து 513 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 427 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.ரூ.2 கோடியே 96 லட்சத்து 11 ஆயிரத்து 306 ஆகும். வங்கிகளின் வாரா கடன் சம்பந்தமாக ஆயிரத்து 851 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 33 லட்சத்து 35 ஆயிரம் ஆகும். மொத்தம் 3 ஆயிரத்து 364 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 625 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்