நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 3,676 வழக்குகளுக்கு தீர்வு

நெல்லை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நேற்று ஒரே நாளில் 3,676 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-12-08 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நேற்று ஒரே நாளில் 3,676 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் இந்த ஆண்டிற்கான 5-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஜெயராஜ், கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர், சந்திரா, ராஜமாணிக்கம், ஹேமானந்தகுமார், திருமகள் ஆகியோர் முன்னிலையில் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

தென்காசி, அம்பை, சங்கரன்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, செங்கோட்டை, சேரன்மாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய கோர்ட்டு வளாகத்திலும் தலா ஒரு அமர்வு அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 18 அமர்வுகளில் நீதிபதிகள், மோட்டார் வாகன வழக்குகள், உரிமையியல் வழக்குகள், வங்கி கடன் தீர்வு வழக்குகள் மற்றும் இதர வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள் அதிகளவில் காணப்பட்டனர்.

3,676 வழக்குகளுக்கு தீர்வு

இந்த மக்கள் நீதிமன்றத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள 4 ஆயிரத்து 712 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 458 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.14 கோடியே 80 லட்சத்து 69 ஆயிரத்து 267 பைசல் செய்யப்பட்டது. கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் 1,283 பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 218 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 884 பைசல் செய்யப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 676 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.16 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரத்து 151 பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்